14 ஆம் திகதிவரை ஊரடங்கு நீடிப்பா? தீர்மானம் எட்டப்படவில்லை என்கின்றார் இராணுவ தளபதி


நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னரும் நீடிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


தற்போது நாட்டில் கொரோனா தொற்று நோயாளிகள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடியே இறுதி தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பாக உடனுக்கு உடன் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.


தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் உத்தரவை 14 ஆம் திகதிவரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.


இருப்பினும் குறித்த விடயம் தொடர்பாக நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசப்படவில்லை என அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.

No comments: