தமிழர்களை அடக்கிய சட்டம் இன்று சிங்களவரை அடக்க பயன்படுகின்றது - செல்வராசா கஜேந்திரன்


தமிழரின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அன்று கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டம் தற்போது சிங்களவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும்போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


சிங்கள காலனித்துவ ஆதிக்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஜனநாயகம் மற்றும் ஆயுத ரீதியாக போராடியபோது அதனை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட இந்த அவசரகால சட்டம் 30 ஆண்டுகளாக தமிழர்களை வேட்டையாடியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


இதன்போது பெண்களை சித்திரவதை செய்வதற்கும், தமிழ் இளைஞர்களை கொலை செய்வதற்கும் தமிழர் பகுதியில் உள்ள செல்வங்களை கொள்ளையடிக்கவுமே இந்த அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.


இந்நிலையில் இன்று சிங்கள மக்களிடமிருந்து வரும் எதிர்ப்பை சமாளிப்பதற்காக இந்த அவசரகால சட்டம் மீண்டும் அமுல்படுதப்பட்டுள்ளது என்றும் அரசாங்கத்தின் இந்தப்போக்கு நாட்டை அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லும் என்றும் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டார். (CBC TAMIL)

No comments: