வௌிநாடுகளிலிருந்து வருவோருக்கான வழிகாட்டல் - நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த புதிய நடைமுறை


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் நேற்று (28) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


அதன்படி இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று வௌிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள், விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பெறப்படும் பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் நாட்டை வந்தடைந்ததும் மீண்டும் பரிசோதனை முன்னெடுக்காமல் சமூகமயப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதற்காக, தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளையும் முழுமையாக பெற்ற பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் 72 மணிநேரங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனைகளில் தொற்று இல்லை என்ற முடிவினை கொண்டிருக்க வேண்டும்.


சுகாதார அமைச்சில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நேற்று (28) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில், தொழில்நுட்பக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வேண்டுகோளின் பேரில் இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதுடன், இதில் சுகாதார மற்றும் சுற்றுலா அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.


இதேவேளை, முழுமையாக தடுப்பூசி போடாத வெளிநாட்டவர்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்படும் ஹோட்டலுக்கு, தனிமைப்படுத்தல் "bio bubble" பாதுகாப்பின் அடிப்படையில், செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.


அங்கு வைத்து அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.


எனினும், இலங்கையர்களுக்கு விமான நிலையத்தில் அல்லது அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் அவர்களுக்கு தொற்று ஏற்படாவிட்டால் அவர்களை வீட்டிற்கு அனுப்ப வாய்ப்பு உள்ளது.


அத்தோடு அவர்களுக்கு 12 ஆவது நாளில் மீண்டும் மேற்கொள்ளும் பி.சி.ஆர். சோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாவிட்டால், அவர்களை சமூகத்துடன் இணைக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.


வீட்டு தனிமைப்படுத்தல் வசதிகள் இல்லாதவர்கள், அரசாங்க தனிமைப்படுத்தல் மையங்களில் அல்லது அவர்கள் விரும்பும் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: