இலங்கையில் 12-18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி - சுகாதார அமைச்சர்


இலங்கையில் 12-18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


இந்த திட்டத்தின் கீழ் தரம் 7 முதல் 13 வரையான மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்று காரணமாக, பாடசாலைகள் சுமார் ஒன்றரை ஆண்டுகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்க வேண்டும் என கூறினார்.


உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சில சர்வதேச ஸ்தாபனங்கள் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்துள்ளன என்றும்  அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.


தற்போது ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு பூரணமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், பாடசாலை மாணவர்களுக்கும் பூரணமாக தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகளின் கீழ் சுமார் 20 இலட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தக்கூடிய இயலுமை காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


இதேவேளை, 20 - 29 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 34 சதவீதமானோருக்கு முதலாவது கொரோனா தடுப்பூசியும் 12 சதவீதமானோருக்கு இரண்டாம் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

No comments: