யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அடாவடியில் ஈடுபட்ட ஐவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட 5 சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மருத்துவ சேவையாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அச்சுவேலி – தெல்லிப்பளை வீதியில் கடந்த 16 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதனைச் செலுத்திச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்துள்ளனர். எனினும் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு இளவாலை பெரியவிளானைச் சேர்ந்த நட்சேத்திரம் றொடிசன் அயன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

சிகிச்சை பெற்றவர் உயிரிழந்த விடயத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் அவரது உறவினரான ஊழியர் ஒருவர், உயிரிழந்தவருடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு வைத்தியசாலைக்குள் புகுந்த 8 பேர் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். 

சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தவர் எவ்வாறு உயிரிழந்தார் என்று கேட்டு அவரது சகோதரன் உள்ளிட்டவர்களே இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் சகோதரன் உள்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் இன்று மாலை முற்படுத்தப்பட்டனர்.

Post a Comment

0 Comments