மார்ச் 2 நாடாளுமன்றம் கலைக்கப்படும், ஏப்ரல் 25 தேர்தல், மே மாதம் புதிய அரசாங்கம்....

ஏப்ரல் மாத ஆரம்பத்தில் தேர்தல்களை நடத்துவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சி.பி.சி. தமிழ் செய்தியினால் அறிய முடிகின்றது.

அதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான திகதி மற்றும் தேர்தலை நடத்தும் திகதி குறித்து ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜெயசுந்தர சமீபத்தில் தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை கோரியிருந்தார்.

இது குறித்து அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "முன்னர் திட்டமிடப்பட்ட திகதியை விட சபையை கலைக்க நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சியின் ஆதரவு தேவைப்படும். எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தில் அத்தகைய தீர்மானத்தை எதிர்க்கட்சி ஆதரிக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது" என கூறினார்.

எனவே எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் பொதுத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர் ஏப்ரல் 11 முதல் 17 வரை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் பின்னர் மே மாதமளவில் புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments: