நோயாளிகளுடன் நெருங்கிப் பழகியவர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் - ஜனாதிபதி

கொரோனா வைரஸ் தொற்றுடையவர்களுடன் நெருங்கிப் பழகிய குழுக்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்படும் முறைமை தற்போது கடைப்பிடிக்கப்படுகிறது. எனினும் அதற்கப்பாலும் இரு கட்டங்கள் முன்னோக்கி தொடர்புகளை கொண்டிருந்தவர்களை இனம்கண்டு பரிசோதிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒழிப்பதற்கு தேவையான மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின்போது, "வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசுமும் பாதுகாப்புத் துறையும் சுகாதார துறையும் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் குறித்து வரிவாக கலந்துரையாடப்பட்டது.

தற்போது வைரஸ் தொற்றுடையவர்களுடன் நெருங்கிப் பழகிய குழுக்கள் அதற்கப்பாலும் இரு கட்டங்கள் முன்னோக்கி தொடர்புகளை கொண்டிருந்தவர்களை இனம்கண்டு பரிசோதிக்க வேண்டியதன் அவசியத்தை மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

வைரஸை இனம்காண்பதற்கு தேவையான பரிசோதனை கருவி தொகுதி போதுமானளவு இருந்த போதும் எந்தவொரு நிலமைக்கும் முகம்கொடுக்கக்கூடிய வகையில் அவற்றை தருவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி, சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

உலகின் ஏனைய நாடுகளை பார்க்கிலும் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி முன்னெடுத்த நோய்த்தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்களை மருத்துவ நிபுணர்கள் பாராட்டினர். அந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பலப்படுத்துவது வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு மிகவும் முக்கியமானதாகும் என்றும் மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

வைரஸ் பரவாத பிரதேசங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். அப்பிரதேசங்களுக்கு வைரஸ் பரவியுள்ள பிரதேசங்களில் இருந்த செல்வதை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அனைவரும் முடியுமானளவு வீடுகளில் இருப்பது முதலாவது நடவடிக்கை என்ற வகையில் மிகவும் முக்கியமானது என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டனர். வீட்டிலிருந்து வெளியேறும் போது முகக் கவசங்களை அணிதல், முகத்தை தொடுவதை தவிர்த்தல், ஒவ்வொருவருக்கும் இடையே எப்போதும் ஒரு மீற்றர் தூரத்தை பேணுதல் மற்றும் கைகளை நன்றாக கழுவிக்கொள்தல் ஐந்து முக்கிய பாதுகாப்பு நடைமுறைகளாகும்.

நிபுணர்கள், பல்கலைக்கழகங்கள், தொழிநுட்ப நிறுவனங்கள், தனிப்பட்ட குழுக்கள் கோவிட் 19 தொடர்பான பல்வேறு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுள்ளனர். அக்கண்டுபிடிப்புகளை உடனடியாக துறைசார்ந்த மட்டத்தில் ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கோரோனா வைரஸ் விரைவாக தொற்றக்கூடியவர்கள் குறித்தும், அவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு பின்பற்றப்படவேண்டிய முறைமைகள் என்னவென்றும் ஜனாதிபதி வினவினார்.

நீரிழிவு, சுவாசம் மற்றும் இருதயம் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் உரிய மருந்துகளை உரிய முறையில் எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டனர். அதேபோன்று புகைப்பதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அனைவரும் எல்லா சந்தர்ப்பங்களிலும் தொண்டைப் பகுதியை ஈரலிப்பாக வைத்திருப்பதற்காக நீராகாரங்களை பருக வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

No comments: