காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நிவாரணம் சென்றடைந்தா என்பதை உறுதிப்படுத்துங்கள் - காணாமல்போனோர் அலுவலகம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நிவாரணம் சென்றடைந்தா என்பதை உறுதிப்படுத்துமாறு காணாமல் போனோர் அலுவலகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் விசேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் குறித்து இன்று (08) ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்திலேயே காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டில் நிலவும் இந்த நெருக்கடி நிலை, இந்த குடும்பங்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்றும்  தற்போதைய நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் வகையில் உணவு மற்றும் நிதி உதவி உட்பட இந்த நிவாரண நடவடிக்கைகளில் காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, ஒரு குறுகிய கால நடவடிக்கையாக, கிராம சேவகர்கள் மூலம் காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்க வேண்டும் என்று காணாமல் போனோர் அலுவலகம் பரிந்துரைக்கிறது.

காணாமல் போனோரின் அலுவலகம் பரிந்துரைத்த இடைக்கால நிவாரண நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, காணாமல் போன மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்க, 2019 வரவுசெலவு திட்டத்தில் 500 மில்லியனை ஒதுக்க அரசாங்கம் முன்மொழிந்தது

ஆனால் காணாமல் போனோர் அலுவலகதிற்கு கிடைத்த தகவல்களின்படி, சுமார் 11 மில்லியன் மதிப்புள்ள இடைக்கால நிவாரணக் கொடுப்பனவுகள் 153 பயனாளிகளுக்கு 2019 நவம்பர் 11 வரை செலுத்தப்பட்டுள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல் போன மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் வயதானவர்கள் மற்றும் பெண் தலைமையிலான குடும்பங்கள் மற்றும் ஒரு குடும்ப உறுப்பினரின் அன்றாட ஊதியத்தில் வாழ்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டி அவர் அக்கடிதத்தை எழுதியுள்ளார்.

No comments: