அரசாங்கம் வாய்திறக்கக் கூடாது...! மீறினால் நாம் வேடிக்கை பார்க்க மாட்டோம்...! ஞானசாரர் எச்சரிக்கை

அரசாங்கம் தேர்தல் என்ற பேச்சினை மூன்றுமாத காலத்திற்கு எடுக்காது முதலில் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் நாட்டினை நாசமாக்கும் அரசியல் செயற்பாடுகளை எம்மால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற பொதுபல சேனா பெளத்த அமைப்பின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொட்னு கருத்து தெரிவித்த அவர், "நாட்டில் மிகவும் மோசமான சூழலொன்று காணப்படுகின்ற நிலையில் அரசாங்கம் எக்காரணம் கொண்டும் பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம் என்பதே அரசாங்கத்திற்கு நாம் கூறும் அறிவுரையாகும்.

அரசாங்கத்திற்கு தேர்தலை நடத்த நோக்கம் இருந்தாலும் தேர்தலில் வாக்களிக்க  மக்கள் தயாரில்லை. ஆகவே மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு தேர்தலை பிற்போட வேண்டியதே அரசாங்கம் இப்போது கையாள வேண்டியதாகும்.

நாம் இதுவரை காலமாக கூறிய, முன்வைத்த, முன்னெடுத்த கொள்கையே இன்று இந்த அரசாங்கம் பின்பற்றி வருகின்றது. ஆனால் இருக்க வேண்டிய இடத்தில் நாம் இல்லை. எனினும் மக்களின் பக்கம் நாம் எப்போதும் சிந்திக்கின்ற நபர்கள் என்ற வகையில் தேர்தலை பிற்போட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். மக்கள் இன்று பாராளுமன்றத்தையோ, அமைச்சர்களையோ எதிர்பார்க்கவில்லை. மாறாக இராணுவம் நாட்டினை பொறுப்பேற்றால் போதுமானது என்ற நிலையில் பெரும்பான்மையான மக்கள் உள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்பு தரப்பினர் மற்றும் வைத்தியர்கள் மிகச் சரியாக செயற்பட்டு வருகின்றனர். எனினும் ஜனநாயகத்தை நாசமாக்கி இராணுவ ஆட்சியை கொண்டுவாருங்கள் என  நாம் கூறவில்லை. சர்வாதிகாரிகளை உருவாக்குவதல்ல எமது நோக்கம். ஆனால் இன்று நாம் எதிர்நோக்கும் சூழலை கையாள வேண்டிய தேவை உள்ளது. 

மக்களை எவ்வாறு பசி பட்டினியில் இருந்து மீட்டெடுப்பது, நாட்டினை எவ்வாறு பாதுகாப்பது என்பதே அவசியமாகும். இதில் ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டம் சிறந்ததாக கருதுகின்றோம். 

எனினும் இப்போது தேர்தலை நடத்தாது பாதுகாப்பு படைகளை கொண்டு நாட்டினை கொண்டு செல்ல வேண்டும். மூன்று மாதகாலமேனும் தேர்தலை பிற்போட்டு மக்களை பாதுகாப்போம். இதில் அரசியல் அமைப்பினை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் அமைப்பு ஒன்றும் மக்களை மீறிய விடயமல்ல. மக்களை பாதுகாக்கவே சட்டம், அரசியல் அமைப்பு அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரசியல் வாதிகள் அதிகாரத்தை தக்கவைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவோ, ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக மக்களை நாசமாக்க வேண்டாம். மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும். 

நாட்டினை மோசமான நிலைக்கு தள்ளுவதை எம்மால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. சீனா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளின் நிலைமையை கவனத்தில் கொள்ளுங்கள். அவர்களை பார்த்தும் நாமும் அதே தவறுகளை செய்துவிடக் கூடாது. தேர்தல் என்ற பேச்சை தள்ளிவைத்துவிட்டு மூன்று மாதகாலத்திற்கு தேர்தலை கைவிட்டு மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்தார்.

No comments: