இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்த நான்காவது நபருக்கு கொரோனா தொற்றியது எப்படி?

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மரணமடைந்த 4 ஆவது நபருக்கு அந்த தொற்று எப்படி ஏற்பட்டது என்பதில்  சந்தேகம் எழுந்துள்ளது.

தெஹிவளை - நெதிமாலை பகுதியைச் சேர்ந்த குறித்த 58 வயதான நபர் இந்தியாவுக்கு தனது மனைவியுடன் சுற்றுலா சென்று  திரும்பும் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில்  இத்தாலியில்  இருந்து திரும்பிய இலங்கையர்களின் தனிமைப்படுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் சிக்கியதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு போராட்டம் செய்த இத்தாலியில் இருந்து திரும்பிய பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளகியுள்ளமையும், அப்போராட்டத்தை கட்டுப்படுத்த தலையீடு செய்த  இராணுவ மேஜர் ஒருவரும் தொற்றினால் பாதிக்கப்பட்டமையும்  உறுதி செய்யப்பட்ட பின்னணியிலேயே, நேற்று முன்தினம் உயிரிழந்த 4 ஆவது தொற்றாளருக்கு எப்படி வைரஸ் தொற்றியது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவில் வைத்து, அந்த தொற்று அவருக்கு ஏற்பட்டதா அல்லது கட்டுநாயக்க விமான நிலைய சம்பவம் காரணமாக வைரஸ் தொற்றுக்குள்ளானார்களா என இதுவரை உறுதியாக தெரியவராத போதும், உயிரிழந்த நபரின் மனைவியும் தற்போது கொரோனா தொற்று காரணமாக அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கூறினர்.

இலங்கையில் பதிவான  நான்கு கொரோனா மரணங்களில், முதல் மூன்று பேரின் மரணமானது வைரஸ் தொற்றுக்கு மேலதிகமாக மேலும் சில நோய் நிலைமைகள் காரணமாக இருந்துள்ளன.

எனினும் நான்காவது நபரின் மரணமானது முற்று முழுதாக கொரோனா வைரஸ் தக்கத்தால் ஏற்பட்ட தீவிர நியூமோனியா நிலைமையால் ஏற்பட்டது என அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை தகவல்கள் உறுதி செய்தன.

நன்றி வீரகேசரி

No comments: