Friday, June 12, 2020

2 ஆவது மனைவி மண்வெட்டியால் அடித்துக் கொலை... கணவர் கைது : அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு, குடியிருப்பு பகுதியின் பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் மூடப்பட்ட குழி ஒன்றிலிருந்து நேற்று (11) மாலை ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தம்பலகாமப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் வீடொன்றில் வசித்துவந்த பெண்ணை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் குறித்தப் பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன்போது  தனது மனைவியை வயது (51) மண்வெட்டியால் தாக்கி கொலை செய்து தனது வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் சுமார் 75 மீற்றர் தூரத்தில் குழி ஒன்றில் புதைத்து விட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் குறித்த பெண்ணின் கணவர் வயது (41)  தெரிவித்துள்ளார்.

குறித்த நபருக்கு இரு மனைவிகள் உள்ளதாகவும் மூத்த மனைவி வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், மினுவாங்கொட திவுலபிடிய பகுதியை சேர்ந்த கொலை செய்யப்பட்ட இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

எனினும் இன்றைய தினம் (12) நீதிமன்றத்தில்  கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் விவாகரத்து தொடர்பான வழக்கு இருந்ததாகவும் குடும்ப பிணக்கு காரணமாக குறித்த பெண்ணை மண்வெட்டியால் தாக்கி கொன்றதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு இன்று (12) தடயவியல் பொலிஸார்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி  சென்று விசாரணையில் ஈடுபட்டதுடன், கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசானி தேனபது சடலம் புதைக்கப்பட்ட குழியினை தோன்றுவதற்கு அனுமதியளித்ததையடுத்து சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

இதனையடுத்து அழுகிய நிலையில் தோண்டி எடுக்கப்பட்ட சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.