சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதில் பாரிய குறைபாடு உள்ளது - தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் கவலை

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதில் பாரிய குறைபாடு உள்ளதாக தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் கவலை வெளியிட்டுள்ளன.

கொரோனா தொற்று காலத்தில் ஆளும் கட்சி தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதாக தெரிவித்துள்ள நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே அமைப்பு) நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன், குறிப்பாக 5000 ரூபாய் கொடுப்பனவை சுட்டிக்காட்டினார்.

எனவே சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலினை தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மனாஸ் மக்கீன் வலியுறுத்தினார்.

இதேவேளை "கடந்த தேர்தல்களின் போது கூட, ஒருபோதும் சமமாக இருந்ததில்லை. ஆனால் தொற்றுநோயால், இந்த நிலைமை மோசமடைந்துள்ளது" என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பிரசார நிதி ஒழுங்குமுறை குறித்த சட்டம் இல்லாததன் விளைவாக அதிகளவான பணம் உள்ள வேட்பாளர்களுக்கு எப்போதும் ஒரு நன்மை இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையமும் கொரோனா தொற்று, செல்வந்த வேட்பாளர்களுக்கு பயனளிக்கும் நிலைமைகளை உருவாக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

கோவிட் -19 இன் விளைவாக வரையறுக்கப்பட்ட பிரச்சார சுதந்திரம் காரணமாக நிதி ரீதியாக பலவீனமான வேட்பாளர்கள் கணிசமான பாதகத்திற்கு ஆளாக நேரிடும் என அந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக நிதி வைத்திருப்பவர்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் மீடியா இரண்டிலும் பிரச்சாரம் செய்ய முடியும் என்றும் பாரம்பரிய முறை மூலம் வீடு வீடாக பிரசாரம் மேற்கொள்பவர்களுக்கு இது பாதகமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: