இலங்கையிலும் பாரிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது - எம்.டபிள்யூ. வீரக்கோன் எச்சரிக்கை

தென்கிழக்கு இந்தியாவின் ஒடிசா பகுதியை அச்சுறுத்தும் பாலைவன வெட்டுக்கிளியினால் இலங்கையிலும் பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாக விவசாய சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டபிள்யூ.எம்.டபிள்யூ. வீரக்கோன் எச்சரித்துள்ளார்.

மேலும் இது இலங்கை மீது படையெடுத்தால், அது பேரழிவு தரக்கூடும் என்று எச்சரித்த அவர், தற்போது கிளிநொச்சி, கேகாலை மற்றும் மாத்தறையில் விவசாய நிலங்களில் காணப்படும் வெட்டுக்கிளிகள், இந்தியாவை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகளை விட சாதாரணமானவை என்றும் அவர் கூறியுள்ளார்.

இவற்றுக்கு வேதியியல் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றும் இந்த வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கிழங்கு வகை மற்றும் சோளம் போன்றவற்றையே தாக்கியதாகவும் அவர் கூறினார்.

இவை இன்னும் நெல் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் விவசாய சேவைகள் பணிப்பாளர் டபிள்யூ.எம்.டபிள்யூ. வீரக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

"இந்த உள்ளூர் வெட்டுக்கிளியின் தற்போதைய படையெடுப்பிற்கு முன்னர், இறுதியாக கடந்த ஆண்டு கேகாலையில் அடையாளம் காணப்பட்டது, முருங்கைக்காய் மற்றும் தென்னம் தோட்டங்களை கூட தாக்கியது" என்று வீரக்கோன் கூறினார். 

அத்தோடு 1970 களில் கூட நாட்டில் உள்ளூர் வெட்டுக்கிளிகளின் படையெடுப்புகள் பதிவாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: