சர்வதேச விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க வியட்நாம் அரசு தீர்மானம்

கொரோனா வைரஸிலிருந்து "பாதுகாப்பானது" என்று கருதப்படும் இடங்களுக்கு வெளிநாட்டு விமான பயணத்தை மீண்டும் தொடங்குவது குறித்து வியட்நாம் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முகமாக அங்கு மார்ச் 22 முதல் வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சர்வதேச வர்த்தக விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்காக "பாதுகாப்பான பிராந்தியங்களின்" பட்டியலை தயாரிக்குமாறு பிரதமர் நுயேன் ஜுவான் பௌக் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக குறைந்தது 30 நாட்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய எவரும் அடையாளம் காணப்படாத பாதுகாப்பான இடங்களாக அவை இருக்கும் என்றும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் சுமார் 97 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வியட்நாமில் தற்போது வெறும் 332 கொரோனா நோயாளிகளே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவற்றில் 192 வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதுடன் இதுவரை ஒரு மரணம் கூட அங்கு பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: