யாழ். நாகவிகாகாரை மீது தாக்குதல் - மக்கள் குழப்பமடைய தேவையில்லை

யாழ். நாகவிகாகாரை மீது அடையாளம் தெரியாதவர்கள் இன்று காலை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

விகாரை மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு காரணமாக விகாரையின் முன்பகுதியில் உள்ள புத்தர் சிலை சிறிது சேதமடைந்துள்ளது. அதன் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து இப்பகுதியில் படையினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள யாழ் நாகவிகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், இன ஒற்றுமையை விரும்பாதவர்களினால் நாக விகாரை மீது தாக்குதல் இடம் பெற்றிருக்கலாம் இது தொடர்பில் மக்கள் குழப்பமடைய வேண்டாம்  என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது நாக விகாரையில் ஒரு சிறிய தாக்குதல் சம்பவம் ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி அனைத்து இன மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

அதனை குழப்புவதற்காக சிலரால் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்பதுதான் எனது கருத்து.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

இந்த விடயம் குறித்து தென்பகுதியில் உள்ள பௌத்த மக்களோ அல்லது வேறு இன மக்களோ குழப்பமடைய வேண்டாம்.தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்.

இந்த விடயத்தினை பெரிதாக்கி எமது இன ஒற்றுமையை குலைக்காது. அனைவரும் ஒற்றுமையாக செயற்படுமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments