கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்


இந்தியாவினால் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி விநியோக நடவடிக்கை  இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, முதல் கட்டமாக மேல் மாகாணத்தின் ஆறு முக்கிய வைத்தியசாலைகளில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முன்னின்று செயற்படும் சுகாதாரப் பணியாளர்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினருக்கு முதல் கட்டமாக தடுப்பூசியினை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக  வழங்கப்பட்ட 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் நேற்று நாட்டை வந்தடைந்தது.

இந்தியாவின் சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ள அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் எனும்  தடுப்பூசிகள் 42 பொதிகளில் பொதியிடப்பட்டு, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த தடுப்பூசிகளை 25 மாவட்டங்களுக்கும் குளிரூட்டப்பட்ட வாகனங்களில் விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: