கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் வழக்கு: நீதிபதி இளஞ்செழியன் முக்கிய உத்தரவு


திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் தொடர்பான வழக்கு இன்று மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சர்ச்சையை ஏற்படுத்திய கோவில் விடயத்தை சாமாதானமான முறையில் தீர்ப்பதற்கு வழியுண்டா என்பது தொடர்பாகவும் தொல்பொருட்கள் இல்லாத பிரதேசம் எது என கண்டுபிடித்து நீதிமன்றில் அறிக்கையிடுமாறும் கடந்த தவணை உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும், கடந்த மாதம் நிலவிய தொடர் மழை காரணமாக ஆய்வுகளை மேற்கொள்ள முடியால் போனதாக அரச கனிஷ்ட சட்டத்தரணி மன்றுக்கு இன்று அறிவித்துள்ளார்.

சமாதான உடன்படிக்கையையும் கோவில் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கான வரைபடத்தையும் அடுத்த தவணை மன்றில் சமர்ப்பிக்குமாறும் இதன்போது நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, தென்னைமரவாடி திரியாய் மக்களின் காணிக்குள் தொல்பொருட்கள் காணப்படுவதாகக் கூறி நடவடிக்கை எடுத்தபோது, இடைக்கால தடை விதித்து தொல்பொருள் திணைக்களத்திற்கு விதிக்கப்பட்ட உத்தரவும் இன்று நீடிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த இரு வழக்குகளுக்கான இரு கட்டளைகளையும் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை நீடித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments: