13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நீக்கவே அரசாங்கம் முயற்சி - சுரேஷ் குற்றச்சாட்டு


இந்தியாவை பகைக்காது 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நீக்கவே, அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய ஆட்சியாளர்கள் தமக்குத் தேவையான சர்வாதிகாரத்தினை வலுப்படுத்துவற்காக அரசியலமைப்பில் 20ஆவது திருத்தச் சட்டத்தினைக் கொண்டுவந்தனர் என கூறினார்.

தற்போது தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவரவும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டினை வலியுறுத்தவும் அடிப்படைச் சட்டத்தினை மாற்றுவதற்காகவுமே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அத்துடன், புதிய அரசியலமைப்பானது சிறுபான்மை மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாகவோ அல்லது இனப் பிரச்சினைக்குத் தீர்வினைத் தரக் கூடியதாகவோ அமையும் என கருதவில்லை என என்றும் கூறினார்.

இந்நிலையில், மிக முக்கியமாக 1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அகற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments: