ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியுற்றதை பசிலின் அழைப்பு உறுதிப்படுத்தியுள்ளது - அனுர


பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான உரிமைகோரல்கள் ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியுற்றதை நிரூபித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.


ஏற்கனவே மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியைக் காரணம் காட்டி கோட்டாபய ராஜபக்ஷ அழைத்து வரப்பட்டதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.


மஹிந்த ராஜபக்ஷவினால் செழிப்பான நாட்டை கொண்டுசெல்ல முடியாது கோட்டாபய ராஜபக்ஷவால் மட்டுமே அதைச் செய்ய முடிம் என்ற கருத்தியலை உருவாக்கியே இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.


மேலும் தற்போது, பசில் ராஜபக்ஷவினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்று கூறி வருகின்றனர். இது ஜனாதிபதி மற்றும் பிரதமர் தோல்வியடைந்துள்ளனர் என்பதே இதன்பொருள் என்றும் அனுரகுமார திஸாநாயக்க, சுட்டிக்காட்டினார்.


பசில் ராஜபக்ஷ ஏற்கனவே இந்த அரசாங்கத்தில் பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார் என்றும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசாங்கத்தின் முக்கிய பங்கை வகித்தவர் அவர்தான் என்றும் அனுரகுமார திஸாநாயக்க, குறிப்பிட்டார்.

No comments: