ஆளும் கட்சிக்குள்ளே கடும் மோதல் - அவசரமாக நாடு திரும்புகின்றார் பசில்


ஆளும் கட்சிக்குள் கடும் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் எதிர்வரும் 23 புதன்கிழமை நாடு திரும்புவார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டை பிரஜாவுரிமை கொண்ட பசில் ராஜபக்ஷ மே 12 ஆம் திகதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில் 6 வாரங்களின் பின்னர் நாடு திரும்பவுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து அமைச்சரை பதவி விலக வேண்டும் என ஆளும் கட்சி விடுத்திருந்த கோரிக்கை கட்சிக்குள்ளேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இதனை அடுத்து அமைச்சர் உதய கம்மன்பிலவும் விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன் கட்சியின் பொதுச் செயலாளருக்கு சவாலும் விடுத்திருந்தார்.

இந்நிலையில் கம்மன்பிலக்கு பதிலளிப்பதற்காக ஊடக சந்திப்பு கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தால் ஏற்பாடு செய்யப்பட்டபோதும் உயர்மட்டத்தின் அறிவுறுத்தலை அடுத்து இச்சந்திப்பு இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலை விவகாரத்தில் தலையிட்டு பசில் ராஜபக்ஷ விலை உயர்வைத் தடுத்திருப்பார் என் அண்மையில் இராஜாங்க அமைச்சர் நிமல் லங்ஸா தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments: