பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துசெய்து, முன்னாள் போராளிகளை விடுவிக்க சுமந்திரன் கோரிக்கை !!


பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துசெய்து, முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்குமாறு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

அரசாங்கத்திற்கு முடிந்தால் அரசியல் கைதிகளை நாளைய பொசன் பௌர்ணமி தினத்தில் விடுதலை செய்யுமாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.

இந்த விடயத்தில் அரசியல் நாடகத்தை நடத்தாமல் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தினார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதாக பலமுறை உறுதியளித்திருந்தாலும், அரசியல் கைதிகளை தடுத்து வைக்க இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தற்போதைய அரசாங்கம் உறுதியாக இருந்தால் முதலில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இல்லாமல்  செய்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கிடையில் அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கமும் இடம்பெற்றது..

இதற்கிடையில் கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர, கடந்த 5 வருடங்களாக அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சுமந்திரன், 2015 முதல் 2019 வரை நூறுகணக்கான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் இருப்பினும் அதில் திருப்தியடையவில்லை என்றும் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததாகவும் குறிப்பிட்டார்.

அந்த காலகட்டத்தில் எதிர்கட்சியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது என்றும் அரசாங்கத்தின் பங்களிகளாக தாங்கள் இருக்கவில்லை என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

காணொளியாக பார்க்க இங்கே அழுத்தவும் 

No comments: