கொரோனா கட்டுப்பாட்டில் இராணுவ தளபதியின் வகிபாகம் குறித்து ரணில் கேள்வி??


நாட்டில் தற்போதுள்ள நெருக்கடியைத் தீர்க்க கடுமையான திட்டத்தை வகுக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதை அடுத்து இன்று (புதன்கிழமை) உரையாற்றிய அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொள்ளும் என கூறினார்.

இந்நிலையில் நாடாளுமன்றில் ஒரு திட்டத்தை வகுத்து தாக்கல் செய்யுமாறு கோரிக்கை விடுத்த அவர், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தால் விவாதித்து பயனுள்ள திட்டத்தை தொடங்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் கடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் நாட்டின் இருப்புக்களை அதிகரிக்கவும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுமாறும் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க எதிர்க்கட்சி, அரசாங்கத்திற்கு தொடர்ட்ந்தும் ஆதரவை வழங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

இதேவேளை சட்டரீதியான அதிகாரங்கள் இல்லாத ஒரு குழு கொரோனா நெருக்கடியைக் கையாளக்கூடாது என்றும் இதற்கான பொறுப்பை அமைச்சரவை எடுக்க வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரசாங்கம் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தத் தவறியதாலும், அரச அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதாலும் கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிவில் விவகாரங்களில் இராணுவத்தின் ஈடுபாட்டை மன்னிக்க முடியாது என்றும் அது வேறு எந்த நாட்டிலும் நடக்காத விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார அதிகாரிகளுக்கு இராணுவம் தனது ஆதரவை வழங்க முடியும் என்றாலும், கொரோனவை கட்டுப்படுத்தும் செயற்பாடு தொடர்பான முடிவுகளை அமைச்சரவை மற்றும் சுகாதார நிபுணர்கள் எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தனக்கும் இராணுவத் தளபதிக்கும் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது என குறிப்பிட்ட அவர், இந்த செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இது இராணுவ மயமாக்கலுக்கு வழிவகுக்கும் என்றும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

No comments: