கூட்டமைப்பினருடனான சந்திப்பை காலவரையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தை திகதி நிர்ணயம் இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்தரையாடும் நோக்கில், ஜனாதிபதியுடன் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவிருந்தது

இந்நிலையிலேயே, குறித்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய திகதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் முதல் முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பேச்சுவார்த்தை நடத்தவிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தனது திட்டங்களை கடந்த டிசம்பரில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு அனுப்பியது, அதன் பின்னர் இந்த ஆண்டு பெப்ரவரியில் அவர்களின் அழைப்பின் பேரில் குழுவை சந்தித்தது.

இந்நிலையில் குறித்த செயல்முறையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வழிகள் குறித்து விவாதிப்பதாகவே ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெறவிருந்ததாக சுமந்திரன் கூறினார்.

No comments: