டெல்டா தொற்றை குறைத்து மதிப்பிட வேண்டாம்... மூன்று வாரங்கள் முடக்குமாறு கோரிக்கை!


அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போதுமானதல்ல என சுட்டிக்காட்டியுள்ள சுகாதார தரப்பினர் நாட்டில் தற்போது பரவி வரும் டெல்டா தொற்று தாக்கத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளனர்.


ஆகவே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தது மூன்று வாரத்திற்கு முடக்க கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.


கொரோனா தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு நாட்டினை முறைப்படுத்தப்படும் தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் பயனுள்ளதாக அமையாது என்றும் அவர்கள் அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியுள்ளனர்.


கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை காலம் தாமதிக்காது அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.


இதேவேளை தடுப்பூசி நடவடிக்கை முழுமையாக முடிவடையாத சந்தர்ப்பத்தில் பயனற்ற கட்டுப்பாடுகளால் ஆபத்து மிக அதிகமாகும் என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், தாமதப்படுத்தாது முழு முடக்கத்திற்கு செல்ல வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

No comments: