நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்குங்கள் - அரசாங்க தரப்பில் உள்ள கட்சிகள் ஜனாதிபதிக்கு கடிதம்!


குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை மூடி வைக்குமாறு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 


கொரோனா தொற்றின் சமீபத்தைய அதிகரிப்பினை இந்த மூன்று வாரங்கள் நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு மூலம் நிறுத்த முடியும் என தங்கள் நம்புவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


நாடு தொடர்ந்தும் திறந்திருந்தால், தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் நோயாளர்களின் அச்சத்தால் நாடு செயற்றிறனை இழக்கும் அபாயம் உள்ளதென ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


நோயை கட்டுப்படுத்துவதன் மூலம், மக்களின் நம்பிக்கையை மேம்படுத்தி நாட்டின் பொருளாதார செயற்பாட்டையும் மேம்படுத்த முடியும் என அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே தற்போதைய சூழ்நிலையை ஒரு தேசிய பேரிடராக கருதி அதை எதிர்கொள்ள அனைத்து கட்சி பொறிமுறையை செயற்படுத்த வேண்டும் என முன்மொழிவையும் ஜனாதிபதியிடம் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.


அத்தோடு மேற்கூறிய பொறிமுறையை அறிவுறுத்துவதற்காக சுகாதார மற்றும் பொருளாதார நிபுணர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


குறித்த கடிதத்தில், அதுரலிய ரதன தேரர், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அமைச்சர் விமல் வீரவரன்ச, அமைச்சர் உதய கம்மன்பில, ஏ.எல்.எம்.அதாவுல்லா, டொக்டர். ஜி.வீரசிங்க, அசக நவரத்ன, கெவிந்து குமாரதுங்க ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

No comments: