நள்ளிரவு 12:06 மணிக்கு இரகசியமாக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம்.. அமெரிக்கர் வெளியேறியதும் நாட்டை விட்டுச் சென்ற கோட்டா


கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி புதிய தகவலை வெளியிட்டுள்ளது.


இந்த ஒப்பந்தம் சனிக்கிழமை (18) அதிகாலை 12:06 மணிக்கு கையெழுத்தானது என்றும் பின்னர் அதிகாலை 2 மணியளவில் அமெரிக்க முதலீட்டாளர்கள் வெளியேறினர் என்றும் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.


அதன் பின்னரே ஜனாதிபதி அமெரிக்காவிற்கு பறந்தார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.


கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் 350 மெகாவோட் மின் உற்பத்தி திட்டத்தின் தற்போதைய உரிமையாளரான வெஸ்ட் கோஸ்ட் நிறுவனத்தின் பங்குகளில், திறைசேரிக்கு சொந்தமான 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.


இதுதவிர, மின்உற்பத்தி நிலையத்தின் இயற்கை வாயு மிதக்கும் களஞ்சியசாலை, குழாய் கட்டமைப்பை நிர்மாணித்தல், நிர்வகித்தல் என்பவற்றிற்கு குறித்த நிறுவனத்திற்ககு வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது என அனுரகுமார திசநாயக்க தெரிவித்தார்.


இந்த அமைச்சரவை பத்திரம் கடந்த 6 ஆம் திகதி அனுமதிக்கப்படும் போது எந்தவொரு அமைச்சரிடமும் அந்த பத்திரம் இருக்காத நிலையில் அமைச்சரவை அங்கீகரிக்கிறது என்றும் அனுரகுமார திசநாயக்க சுட்டிக்காட்டினார்.


இவ்வாறு பங்குகளை விற்பனை மற்றும் கொள்வனவு செ்ய்வதற்காக ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர், அதை அனுமதிக்காக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கையொப்பமிட்ட பின்னர் எதற்காக அனுமதிக்கிறார்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.


இந்த நாட்டில் இரவு 12 மணிக்கு ஒப்பந்தம் கைச்சாத்திடுவது இதுவே முதன்முறை என குறிப்பிட்ட அனுரகுமார திசநாயக்க, இனிவரும் காலத்தில் இந்த நாட்டின் அரசாங்கத்தை அணுசக்தி துறையின் உரிமையாளரே தீர்மானிப்பர் என்றும் குறிப்பிட்டார்.


இருப்பினும் இதற்கு எதிராக சட்டரீதியான  நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்ட அனுரகுமார திசநாயக்க, இந்த விடயம் தொடர்பாக சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள சட்டத்தரணிகள் குழுவை நாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய மூன்று அமைச்சரவை அமைச்சர்களின் ஆட்சேபனைகளை மீறி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


இந்த ஒப்பந்தத்தின் மூலம் திறைசேரிக்கு கிட்டத்தட்ட 300 மில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் என்றும் அறியமுடிகின்றது.

No comments: