கிழக்கில் இருந்து மாலைதீவில் தீவொன்றை உருவாக்க இலங்கையிலிருந்து அள்ளிச் செல்லப்படும் மணல் - சபையில் சாணக்கியன்


மாலைதீவில் மற்றுமொரு தீவை உருவாக்குவதற்காக கிழக்கு மாகாணத்திலிருந்து பெருமளவு மணல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.


நாடாளுன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய அவர், மாலைதீவில் அமைக்கப்பட்டு வருகின்ற புதிய தீவிற்கு கொண்டு செல்லும் முயற்சிகள் இடம்பெறுவதாக கூறினார்.


இந்த கடத்தல் செயற்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் தொடர்புபட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


அதேபோல கிழக்கு மாகாண ஆளுநரான அநுராதா யஹம்பத்தும் இதற்கு ஒத்துழைத்து வருவதாகவும் இரா.சாணக்கியன் குற்றம்சாட்டினார்.


இவ்வாறான கடத்தல் செயற்பாடுகள் காரணமாக இலங்கைக்கு கிடைக்கவிருந்த பெருமளவு அமெரிக்க டொலர் வருமானம் இல்லாமல் போவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


அரச தரப்பினரே, சட்டத்திற்கு முரணான இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டார்.


இருப்பினும் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆளும்தரப்பில் இருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: