தடுப்பூசி செலுத்தச்சென்ற மக்களை தாக்கிய பொலிஸ் பரிசோதகர் - மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் கவலை


வெலிகம பகுதியில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்ற மக்களை பொலிஸ் பரிசோதகர் தாக்கிய சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர், சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கவலை வெளியிட்டுள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதி அமைப்பாளர் ரெஹான் ஜயவிக்ரம தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காணொளி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் அதனை மேற்கோளிட்டு கருத்து வெளியிட்டுள்ள அம்பிகா சற்குணநாதன், "தாம் எவ்விதத்திலும் பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்தப்படமாட்டோம் என்பதை அறிந்துள்ள பொலிஸார், பொது இடங்களில் மக்களை பின்விளைவு எதுவும் இல்லாமல் தைரியமாக அடிக்கலாம் என அவர்கள் கருதுகிறார்கள்.


அவ்வாறெனின் பொலிஸ் நிலையங்களுக்குள் என்ன நடக்கக்கூடும் என சிந்தித்துப் பார்க்க வேண்டும். உண்மையில், நாம் கற்பனை செய்ய வேண்டிய தேவை இல்லை.


ஏனெனில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் என்பன ஆவணம் செய்யப்பட்டுள்ளது" என அம்பிகா சற்குணநாதன் பதிவிட்டுள்ளார்.

No comments: