ரிஷாட் பதியுதீன் உள்ள சிறை அறையில் இருந்து கைத்தொலைபேசி மீட்பு..!!


சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ள சிறைச்சாலை அறையில் இருந்து கைத்தொலைபேசி ஒன்று அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ரிஷாட் அடைக்கப்பட்டிருந்த சிறையை தலைமை ஜெயிலரும் மற்றொரு சிறைக்காவலரும் நெருங்கியபோது, அவர் கைத்தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருப்பதை அவதானித்ததாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.


பின்னர் ரிஷாட் பதியுதீன் குறித்த கைபேசியை வெளியே எறிந்ததை அடுத்து சிறை அதிகாரிகளால் குறித்த கைத்தொலைபேசி மீட்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


சிறைச்சாலை கட்டளையின் கீழ் கைதி ஒருவர் கைத்தொலைபேசியை வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை பேச்சாளர் குறிப்பிட்டார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை முன்னதாக, சிறைச்சாலை மருத்துவர் ஒருவருக்கு கொலை மிரட்டல்கள் விடுத்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையும் சிறைச்சாலை திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: