பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்


புலம்பெயர் தமிழர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் அவர்கள் மீதான தடையை நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.


மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், புலம்பெயர் அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் எந்தளவுக்கு நியாயமானது என்றும் கேள்வியெழுப்பினார்.


அத்தோடு இனப்படுகொலை நடந்திருக்கின்றது என தெரிவிக்கப்படும் நிலையில் இறந்தவர்களுக்கு மரணச் சான்றிதழ் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு தமிழ் மக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


மேலும் உள்ளகப் பொறிமுறையின் ஊடாக பேச்சுவார்த்தை என்பதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் இலங்கையில் ஏற்பட்ட பிரச்சினையை உள்விவகாரம் என்று சொல்வது எந்தளவிற்கு சரியானது என்றும் இரா.துரைரெட்ணம் கேள்வியெழுப்பினார்.


இதேவேளை தற்போதைய சூழலில் உள்ளுராட்சி தேர்தலை நடத்துதற்கான சூழல்கள் இல்லாத காரணத்தினால் அதுவரையில் உள்ளுராட்சி மன்றங்களின் கால எல்லையினை நீடிக்க வேண்டும் என்றும் இரா.துரைரெட்ணம் கோரிக்கை விடுத்தார்.

No comments: