காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் விரைவில் - ஜனாதிபதி உறுதியளிப்பு !


காணாமல் போனவர்கள் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு இறப்புச் சான்றிதழை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கும் என ஐ.நா.பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸிற்கு இடையில் நேற்று (19) சந்திப்பு இடம்பெற்றது.


இதன்போது சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் எடுத்துரைத்துள்ளார்.


அத்தோடு தற்போது முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயன்முறை உள்ளிட்ட உள்நாட்டு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுச்செயலாளருக்கு விளக்கினார்.


அத்தகைய குறித்த நடவடிக்கைக்காக ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் உறுதியளித்துள்ளார்.


2009 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போன்ற விடயம் குறித்தும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.


பயங்கரவாத நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல இளைஞர்கள் தான் ஆட்சிக்கு வந்த பிறகு விடுவிக்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

அவர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க தயங்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியறுத்திய ஜனாதிபதி புலம்பெயர் தமிழர்களை கலந்துரையாடலுக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.

No comments: