எரிபொருள் விநியோக பிரச்சினை: ஓமானுடன் 3.6 பில்லியன் டொலர் ஒப்பந்தம் !!


இலங்கையின் காணப்படும் எரிபொருள் பிரச்சினையை தீர்ப்பதற்காக 20 வருடங்களில் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் ஓமானிடம் இருந்து 3.6 பில்லியன் டொலர் நிதியுதவியைப் பெற இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


குறித்த நிதியுதவியை வழங்கவும் இந்த திட்டத்தை தொடரவும் கொள்கை ரீதியாக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவலை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


ஐந்து வருட சலுகை மற்றும் 20 வருடங்களில் குறித்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் எட்டப்படவுள்ள குறித்த ஒப்பந்தம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


12 மாத காலத்திற்கு எரிபொருளை வாங்கும் வகையில் 3.6 பில்லியன் டொலர் நிதி உதவி இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கும் என அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இருப்பினும் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என குறிப்பிட்டுள்ள எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு என்ற செய்தியில் உண்மையில்லை என்றும் குறிப்பிட்டார்.


அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியாவுடன் எரிபொருள் கொள்வனவிற்காக நிதியுதவியை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தையில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மாதாந்தம் எரிபொருள் கொள்முதலில் இலங்கை தற்போது சுமார் 300 மில்லியன் டொலர்களைச் செலுத்துகிறது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

No comments: