இலங்கை குறித்து ஜெனீவாவில் மற்றொரு தீர்மானம்- பிரித்தானியா தலைமையில் ஐந்து நாடுகள் முடிவு

இலங்கைக்கு எதிராக 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மற்றுமொரு தீர்மானத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகியமை குறித்து கவனத்தில் எடுக்காமல், மீண்டும் தீர்மானம் ஒன்றை கொண்டுவர பிரித்தானியா தலைமையிலான ஐந்து நாடுகள் தீர்மானித்துள்ளன.

புலம்பெயர் தமிழர்களின் கடும் அழுத்தங்களின் அடிப்படையில் இந்த விடயம் மேற்கொள்ளப்படுவதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தில் இருந்து விலகியதாக இலங்கை, ஐ.நா மனித உரிமைகள் சபைக்கு அறிவித்துள்ள போதிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீக்க முடியாது என ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அங்கம் வகிக்கவில்லை என்பதுடன் கண்காணிப்பு மட்டத்தில் செயற்பட்டு வருகின்றமையினால், கண்காணிப்பு மட்டத்தில் இருந்தும் விலகுவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், கடந்த மே மாதம் இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின்போது உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சர்வதேசம் இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம் விடுக்குமாக இருந்தால், சர்வதேச கட்டமைப்புக்களிலிருந்து இலங்கை தனது உறுப்புரிமையை நீக்கிக் கொள்ள பின்வாங்காது என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தினக்குரல்

Post a Comment

0 Comments