ஜனநாயக போராட்டங்களை அடக்கினால் மோசமான விளைவுகளை அரசாங்கம் சந்திக்கும் - இரா.சம்பந்தன் எச்சரிக்கை


ஜனநாயக போராட்டங்களை அடக்கினால் மோசமான விளைவுகளை அரசாங்கம் சந்திக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வன்முறையில் இறங்காமல் ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் மக்களை காடைத்தனமாக பொலிஸாரைக் கொண்டு அடக்குவது அரசின் சர்வாதிகாரப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது என்றும் கூறினார்.


மக்களின் அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமை மறுக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவ்விதமான உரிமை மறுக்கப்பட்டால் அது நாட்டினுடைய போக்கிற்கு நல்லதல்ல என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.


அரசுக்கு எதிராக ஜனநாயக வழியில் எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்ட ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதைத் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என்றும் கூறினார்.


இலங்கை ஒரு ஜனநாயக நாடு எனில் சுதந்திரமாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது என்றும் அந்த உரிமை மதிக்கப்பட வேண்டும் என்பதே தமது வேண்டுகோள் என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

No comments: