வடமராட்சியில் 100 வயது முதியவர் உட்பட இருவர் கொரோனாவால் உயிரிழப்பு !


யாழ். வடமராட்சியில் நேற்று 100 வயது முதியவர் உட்பட இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.


வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலம் மந்திகை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 100 வயதுடைய ஆண் ஒருவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறிப்பட்டது.


இதேவேளை அல்வாய் மேற்கு திக்கத்தைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலும் கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டது.


இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 245 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை யாழ். மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 375 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்


அவர்களில் 74 பேர் பி.சி.ஆர். பரிசோதனையிலும் 301 பேர் அன்டிஜன் பரிசோதனையிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.


சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 61 பேரும் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 48 பேரும் யாழ்ப்பாணம் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 40 பேரும் சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 38 பேரும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 37 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இதேவேளை வேலணையில் 7 பேரும் ஊர்காவற்றுறையில் 10 பேரும் காரைநகரில் 5 பேரும் நல்லூரில் 17 பேரும் சண்டிலிப்பாயில் 31 பேரும் உடுவிலில் 28 பேரும் தெல்லிப்பழையில் 35 பேரும் பருத்தித்துறையில் 13 பேரும் மருதங்கேணியில் 5 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இதனை அடுத்து யாழ். மாவட்டத்தில் 2020 மார்ச்சிலிருந்து நேற்று வரை 12 ஆயிரத்து 460 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஆயிரத்து 161 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 739 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments: