சங்கீதன் கைது : திங்களன்று அடிப்படை உரிமை மனு : சுமந்திரன்


பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் கலைஞர் கணேஷ்குமார் சங்கீதன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து அடிப்படை உரிமை  மனு ஒன்று திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்தெரிவித்துள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையிலான பாடலை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், 24 வயதான கணேஷ்குமார் சங்கீதன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த கணேஷ்குமார் சங்கீதன், யாழ்ப்பாணம் குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் விசாரணையைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை (2) அன்று கைது செய்யப்பட்டார்.


மே 31 அன்று சாவகச்சேரி, நாவற்குழியில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர், பின்னர் அந்த நிகழ்ச்சியில் இருந்து நான்கு பாடல்களின் காணொளிகளைத் தொகுத்து தனது டிக்டாக் கணக்கில் பதிவேற்றியுள்ளார்.


அதில் தழிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அல்லது அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் வசனங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் குற்றத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.


புதன்கிழமை (3) அன்று சங்கீதனை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார், 1979-ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 3(1)(g) பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது. இந்நிலையில் விசாரணைகள் தொடரும் வரை, அவரை ஜூன் 17 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் சங்கீதன் சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் தனது இசையின் மூலம் விடுதலைப் புலிகளுக்குப் புத்துயிர் அளிக்கவோ அல்லது அவர்களை ஊக்குவிக்கவோ முயலவில்லை என வாதிட்டார்.


"அவர் பாடிய பாடலில் 'விடுதலைப் புலிகள்' என்ற வார்த்தையோ அல்லது அவர்களை புகழும் வகையிலோ, அந்த அமைப்பின் சின்னங்களோ, இலச்சினைகளோ, அல்லது அதன் தலைவரின் பெயரோ அதில் இடம்பெறவில்லை," என வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.


குற்றச்சாட்டுகளுக்கான சட்ட அடிப்படையைக் கேள்விக்குட்படுத்திய வழக்கறிஞர், பாடலில் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒருபோதும் குறிப்பிடப்படாத நிலையில், அந்த அமைப்பை மீண்டும் உயிர்ப்பித்ததாக அந்தக் கலைஞர் மீது எப்படி குற்றம் சாட்ட முடியும் என்பதைப் புரிந்துகொள்வது கடினம் என்றும் மேலும் சமர்ப்பித்தார்.


பல தசாப்தங்களாக ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் உள்ளூர் சிவில் சமூகக் குழுக்களிடமிருந்து தொடர்ச்சியான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றிருப்பதானது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.


போதுமான நீதித்துறை மேற்பார்வையின்றி நீண்டகால தடுப்புக்காவலை இந்தச் சட்டம் அனுமதிக்கிறது என்றும், இது சிறுபான்மை சமூகங்கள், ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்றும் நீண்ட காலமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.


இது ஒருபுறம் இருக்க தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட அரசாங்கங்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் செய்வதாக உறுதியளித்த போதிலும், அச்சட்டமானது இன்னும் அமுலில் இருப்பதோடு சிறுபான்மையின மக்கள் மீது மீண்டும் மீண்டும் திணிக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.